சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?

இஸ்லமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அந்நாட்டு பார்லிமென்டில் இது குறித்து விவாதிக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்புக்கு புது அழுத்தம் உருவாகியுள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி.,யின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில், ஏறத்தாழ லீக் சுற்றுப் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டன. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அடைந்த தோல்விகளால், முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியது. நேற்று நடைபெற இருந்த வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டமும் மழையால் ரத்தானது. இதனால், பாக்., அணிக்கு ஒரு வெற்றி கூட இல்லாத மோசமான தொடராக இது அமைந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர், இந்த முறை இந்தியாவுக்கு 'சர்ப்ரைஸ்' காத்திருக்கிறது என்றெல்லாம் கூறிய நிலையில், அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இது சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வி குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தக் கோரி அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுதந்திரமான அமைப்பாக செயல்பட்டு வந்தாலும், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அரசியல் மற்றும் பொது விவகாரங்களுக்கான ஆலோசகர் ரானா ஷனவுல்லா கூறுகையில், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுதந்திரமான அமைப்புதான். ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் ஆட்டம் மோசமானது. எனவே, இது குறித்து பார்லிமென்டிலும், அமைச்சரவையிலும் விவாதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு செலவிடப்பட்டுள்ள தொகை குறித்து பார்லிமென்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். ஆலோசகர்களுக்கு மட்டும் 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களின் பொறுப்புகளை தவறி விட்டதாக ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியெனில் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பார்த்தால், இது பாகிஸ்தானா? அல்லது வேறு ஏதேனும் ஐரோப்பிய நாடா? என்று நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். எனவே, பிரதமர் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஆலோசகரின் இந்தப் பேச்சின் மூலம் பாகிஸ்தான் வீரர்களுக்கும், அணி நிர்வாகிகளுக்கும் அரசு வழங்கி வந்த சலுகைகள் ரத்து செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.




மேலும்
-
இனி 10% தள்ளுபடி காகித பயணச்சீட்டு இல்லை! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
-
பரத நாட்டியத்தை உயிர்ப்பித்த ருக்மணி தேவி
-
தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து
-
உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 ஊழியர்கள்; மீட்பு பணிகள் தீவிரம்
-
பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கமிஷன் தலைவர் சந்திப்பு
-
நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!