சம்மன் ஒட்ட சீமான் வீட்டில் தனி போர்டு

17


சென்னை: சம்மனை கிழித்த விவகாரத்தில் போலீசார் ஈகோவில் தான் இப்படி நடந்து கொண்டதாக சீமானின் மனைவி கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார்.


நீலாங்கரையில் சீமான் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் வீட்டு காவலாளிக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசாரின் சம்மனை ஒட்டுவதற்கு வசதியாக, வீட்டு முன்பு தனி போர்டு சீமான் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சீமான் மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
போலீசார் ஈகோவில் தான் இப்படி செய்கிறார்கள். சம்மன் கொண்டு வரும் செய்தி எனக்கு வந்தது. சம்மனை கையெழுத்து போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்தேன். சீமான் கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியும். அவருக்கு கூட கொடுத்திருக்கலாம். வீட்டுக்கு வந்தவர்கள் ஏதும் சொல்லாமல், சம்மனை ஒட்டி சென்று விட்டார்கள். நான் தான் படிப்பதற்காக அதனை கிழிக்கச் சொன்னேன். கிழிக்கச் சொன்னது நான்தான்.

அந்த சம்மனை படித்துக் கொண்டிருந்த போது, ஆய்வாளர் பிரவீனின் சத்தம் கேட்டது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை விட கூட இருப்பவர்கள் மீது கை வைத்தால் தான் எங்களுக்கு கோபம் வரும் என்று அனைவருக்கும் தெரியும். எங்களை மனதளவில் தொந்தரவு செய்ய வேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.

ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரரை குப்பை போல தூக்கி வீசுகிறார்கள். அவருக்கு துப்பாக்கி வைக்க உரிமம் உள்ளது. ஆய்வாளர் பிரவீனின் சட்டை கசங்கி இருந்ததால், மன்னிப்பு கேட்டேன். முன்பே திட்டமிட்டு தான் போலீசார் இங்கு வந்துள்ளனர்.

நாங்கள் அனைத்திற்கும் துணிந்து தான் இருக்கிறோம். ஆய்வாளர் பிரவீன் வேண்டுமென்றே செய்துள்ளார்கள். வீட்டில் இருப்பவர்களை கைது செய்து மனதளவில் தொந்தரவு கொடுக்கிறார்கள். நேர்மையான ஒரு தலைவர் சீமான். எங்களுக்கு பயம் எல்லாம் கிடையாது. சம்மனை கிழித்த எனது தம்பியை கைது செய்தே ஆவேன் என்றார். இல்லையெனில் படையை இறக்குவேன் என்று கூறினார். எங்கள் வீட்டின் மீது கல் எறிந்த போது போலீசார் என்ன செய்தனர். காவல்துறை மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது.

வக்கீல்களும், கட்சியினரும் வருகிறார்கள் என்று எனக்கு தெரியும். இரு தரப்பினரிடையே பிரச்னையை உண்டாக்கி, நம்ம பிள்ளைங்க மீது கை வைக்கப் போகிறார்கள்என்று தோன்றியது. கைது செய்தவர்களை ரிமான்ட் செய்து விட்டதால், வழக்கு கோர்ட்டுக்கு சென்று விட்டது. கோர்ட் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் வெளியே எடுப்போம். ஆய்வாளர் பிரவீன் மீது மனித உரிமைகள் ஆணையம் மீது முறையிடுவோம்.


எங்களுடைய ஆட்கள் அங்கு இருந்தது மற்றும் போலீசாரின் ஈகோவின் காரணமாகத் தான் நேற்று நான் ஏதும் பேசவில்லை. இன்று பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நடிகையை வைத்து சீமானை முடக்க முயற்சிக்கிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement