சிட்டி கிரைம்..

பார் சப்ளையர் மீது தாக்குதல்



சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த், 27; தடாகம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபாரில் சப்ளையராக பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி இரவு பார் மூடிய பிறகு, இருவர் பார் அருகில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அதைப்பார்த்த அரவிந்த் இங்கு மது அருந்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆத்திரமடைந்த அவர்கள், பீர் பாட்டிலால் அரவிந்த் தலையில் தாக்கி விட்டு தப்பினர். அரவிந்த் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அரவிந்த்தை தாக்கிய பூசாரிபாளையத்தை சேர்ந்த கண்ணன், 48 மற்றும் சூலுாரை சேர்ந்த தண்டபாணி, 35 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

குட்கா விற்பனை; 10 பேருக்கு சிறை



மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக, 10 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

* துடியலுார் பகுதியில் குட்கா விற்பனை செய்த துாத்துக்குடியை சேர்ந்த உலகு, 41 என்பரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 19.61 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

* சரவணம்பட்டி பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட, மணியகரம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப், 26, வியாஸ், 20, விமல்ராஜ், 38, ஆல்வின், 33, கார்த்திக், 25, சண்முக சுந்தரம், 30 பொன்ராஜ், 40 கணபதியை சேர்ந்த விஜய், 31, சின்னவேடம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 43 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 81 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வாலிபர் மர்ம மரணம்



கெம்பட்டி காலனி, ஆறாவது வீதியை சேர்ந்த ஸ்ரீநிவாசன், 55, மாலா, 52 தம்பதியின் இரண்டாவது மகன் வரதராஜ், 25. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக, கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. யாரிடமும் பேசாமல் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு, ஓய்வு எடுப்பதற்காக கெம்பட்டி காலனியில் உள்ள, தங்கள் நகை பட்டறைக்கு செல்வதாக கூறிச் சென்றார். மறுநாள் காலையில் வீட்டிற்கு வரவில்லை. அவரது தாயார் மாலா பட்டறைக்கு சென்று பார்த்தார். அப்போது, வரதராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மாலா பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

லாரி மோதி பாதசாரி பலி



கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் குபேந்திரன், 23. இவர் லோடு ஏற்றிக்கொண்டு, லாரியில் கோவை சுக்ரவார் பேட்டை ரோட்டில் வேகமாகவும், கவனக்குறைவாகவும் சென்று கொண்டிருந்தார். லாரி சுக்ரவார்பேட்டை சந்திப்பு பகுதிக்கு வந்த போது, சாலையை கடக்க முயன்ற, 55 வயது நபர் ஒருவர் மீது மோதியது. அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

லாட்டரி விற்ற இருவர் கைது



பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆவாரம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், இருவர் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை செய்து பார்த்த போது, கேரள மாநில ஸ்ரீ சக்தி லாட்டரி டிக்கெட்கள் இருந்தன. போலீசார் லாட்டரி டிக்கெட்கள், இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்து, லாட்டரி விற்ற ஆவாரம்பாளையத்தை சேர்ந்த பாக்கிய சந்திரன், 59, கேசவன், 50 ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement