கல்லுாரி மாணவி கடத்தல்; தாய், மகன், 3 பேர் கைது

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சோழதாசன்பட்டியை சேர்ந்த நந்தகோபால், 25; கட்டட தொழிலாளி. அம்மாப்பட்டியைச் சேர்ந்த, 19 வயதான கரூர் கல்லுாரியில், பி.ஏ., வரலாறு இறுதியாண்டு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.


நந்தகோபாலின் காதலை மாணவி ஏற்கவில்லை. ஆத்திரமடைந்த நந்தகோபால், மாணவியை கடத்த முடிவு செய்தார். நண்பர்களுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் கரூர் அருகே பொன் நகரில், கல்லுாரிக்கு நடந்து சென்ற மாணவியை, 'ஆம்னி மாருதி' வேனில் கடத்திச் சென்றார்.


மாணவியின் சகோதரி புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் இருப்பது தெரியவர, போலீசார் விரைந்தனர்.


பாட்டி பொன்னம்மாள் வீட்டில், மாணவியுடன் பதுங்கியிருந்த நந்தகோபாலை, நேற்று அதிகாலை சுற்றி வளைத்தனர். நந்தகோபால், அவரது தாய் கலா, 50, ஆம்னி வேன் ஓட்டுநர் கருப்புசாமி, 28, நந்தகோபால் நண்பர்கள் பழனிசாமி, 28, சரவணன், 28, என, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மாணவியை மீட்டு உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement