குப்பை சேகரிக்கும் பணி; பின்தங்கிய திருப்பூர்!

திருப்பூர்; 'ஆடை வர்த்தகத்தில், ஆண்டுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் மாவட்டம் என்ற பெருமை, திருப்பூருக்கு உண்டு.

ஆயத்த ஆடை தயாரிப்பில் உலகளவில் தனக்கென ஒரு முகவரி பெற்ற, திருப்பூரில், உடல் நலன் காக்கும் சுத்தமான காற்றுக்கும், சுகாதாரமான சுற்றுச்சூழலுக்கும் பஞ்சம் என்பதுதான் வேதனையான உண்மை.

திருப்பூர் என்பது, கட்டமைக்கப்பட்ட நகரம் இல்லை; மாறாக, பல சிறு, சிறு ஊராட்சிகளின் இணைப்பில் உருவான, பிணைப்பு நகரம் தான் திருப்பூர். தற்போதைய சூழலில், 265 கிராம ஊராட்சிகள், அவற்றில், 4.93 லட்சம் வீடுகளை கொண்ட மாவட்டமாக திருப்பூர் விளங்குகிறது. கிராம ஊராட்சிகளில், சுகாதாரம் காக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்கள், தினசரி வீடு, வீடாக சென்று குப்பை சேகரிப்பது, அவற்றை மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக தரம் பிரித்து, மட்கும் குப்பைகளை உரமாகவும், மட்காத குப்பைகளை மறு சுழற்சிக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது உத்தரவு.

சென்னை நீங்கலாக மாநிலம் முழுக்க உள்ள, 37 மாவட்டங்களில், கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தான், வீடுதோறும் குப்பை சேகரிக்கும் பணியில் பின்தங்கியுள்ளன. 'திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 கிராம ஊராட்சிகளில், 4.93 லட்சம் வீடுகள் உள்ளன. அதில், 3.65 லட்சம் வீடுகள், நேரடியாக குப்பை சேகரிக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அதிலும், 3.40 லட்சம் வீடுகளில் இருந்து தான் நேரடியாக குப்பை சேகரிக்கப்படுகிறது' என்கிறது அந்த கணக்கெடுப்பு.

இந்த அறிக்கை அடிப்படையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் உத்தரவு அடிப்படையில், கிராம ஊராட்சிகளில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி, தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

ரோட்டோரம் குவியும் குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. இருப்பினும், அப்புறப்படுத்தும் குப்பைகளை சேகரித்து, அகற்றுவதில் தான் ஊராட்சி நிர்வாகங்கள் திணறுகின்றன.

இணையுமா கைகள்!



திருப்பூரின் அடையாளமான ஆடை வர்த்தகத்தை உலகளவில் விரிவடைய செய்யவும், வெந்து தணியும் பூமியை பசுமை போர்வையால் குளிர்வூட்ட மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டவும் கை கோர்க்கும் அமைப்புகள், குப்பை மேலாண்மையில், மாநில அளவில் பின்தங்கியுள்ள நிலையை உணர்ந்து, குப்பை மேலாண்மை தீர்வுக்கு, தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது, பொதுவானதொரு எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதற்கான மாற்று வழியை மாவட்ட நிர்வாகம் யோசித்து, அதனை உடனே செயல்படுத்த வேண்டும்.

Advertisement