கிடப்பில் போடப்பட்ட 20 ஆண்டு கோரிக்கை... பனியன் மார்க்கெட்! நிறைவேற்ற தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

திருப்பூர்; இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரில், இதுவரை பனியன் மார்க்கெட் இல்லாத குறையை போக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

'வந்தாரை வாழ வைக்கும்' திருப்பூர் தொழில் நகரம், கடந்த, 30 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்று, பின்னலாடை தொழில் கேந்திரமாக மாறியுள்ளது. இதுவரை, 35 ஆயிரம் கோடி ரூபாய் பின்னலாடை ஏற்றுமதி, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உள்நாட்டு வர்த்தகம் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில், ஏற்றுமதி வர்த்தகம், 40 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், பனியன் தொழில் நிமித்தமாக, லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தியாவின், 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர், பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்; அனைத்து மாவட்ட மக்களும் திருப்பூரில் வசிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் திருப்பூர் நகரில், இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும், பனியன் மார்க்கெட் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது.

காய்கறி, பூ, மீன் மார்க்கெட் மற்றும் மாட்டு சந்தை இருந்தும், திருப்பூரின் வாழ்வாதாரமாக இருக்கும் பனியன் மார்க்கெட் இல்லாதது இன்றும் ஏமாற்றம் தான். நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு, பனியன் ஆடைகளை திருப்பூரில் இருந்து அனுப்புகின்றனர். குறு, சிறு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், தமிழகம் முழுவதும், பின்னலாடை தயாரித்து, விற்பனைக்கு அனுப்புகின்றன. தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பின்னலாடை சிறிய விற்பனைக்கான கடைகள் அமைக்கப்படுகின்றன.

ரோட்டோரமாக கடை அமைத்து, குறு, சிறு உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும், பின்னலாடைகளை விற்கின்றனர். காதர்பேட்டை சந்தை இருந்தாலும், மொத்த விற்பனை மட்டும் நடப்பதால், பொதுமக்கள் பயன்பெற முடிவதில்லை. திருப்பூரை சேர்ந்த மக்கள், தேவையான பின்னலாடைகளை வாங்க, பெரிய கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

குழந்தைகள், பெரியோர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள், வீட்டு உபயோக பனியன் ஆடைகள், பின்னலாடைகள் வாங்க, காதர்பேட்டை அருகே இயங்கும், வாராந்திர விற்பனை கடைகளை நாட வேண்டியுள்ளது. ஒருங்கிணைந்த பனியன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக அரசு இனியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து குறு, சிறு பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

திருப்பூரில் பனியன் மார்க்கெட் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. உள்ளாடை மற்றும் பின்னலாடைகள் விற்கவும், பொதுமக்கள் வாங்கவும், பனியன் மார்க்கெட் வேண்டும். நகரின் மையப்பகுதியிலும், நான்கு மண்டல பகுதிகளிலும், வணிக வளாகம் போன்ற பனியன் மார்க்கெட் அமைத்தால், குறு, சிறு உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் பயன்பெறுவர். மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், முக்கிய ரோடுகள் அருகே, பனியன் மார்க்கெட்டுகள் அமைக்க, மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும், அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement