சர்வதேச பல்கலை தரவரிசை சென்னை ஐ.ஐ.டி., 31வது இடம்

புதுடில்லி,
பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல் என பாடவாரியாக சிறந்து விளங்கும் சர்வதேச பல்கலைகளின் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்த ஒன்பது கல்வி நிறுவனங்கள் 'டாப் 50' இடத்திற்குள் வந்துள்ளன.

'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற சர்வதேச தரவரிசை நிறுவனம், உலகளவில் உள்ள பல்கலைகளின் பாடப்பிரிவு வாரியான தரத்தை மதிப்பிட்டு, 'க்யூ.எஸ்., சப்ஜெட் ரேங்கிங்ஸ்' என்ற பெயரில் வெளியிடுகிறது.

இந்த தரவரிசை பொறியியல், மருத்துவம், கணினி அறிவியல், வணிகவியல், கலை மற்றும் மானுடவியல் போன்ற பாடப்பிரிவில் பல்கலையின் செயல்திறனை, தரத்தை மதிப்பிடுகிறது. இது மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் சிறந்த பல்கலைகளைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

இந்தாண்டுக்கான பாடவாரியான சிறந்த பல்கலைகள் அடங்கிய பட்டியலை க்யூ.எஸ்., நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 500க்கும் மேற்பட்ட பல்கலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் 50 இடங்களுக்குள் ஒன்பது இந்திய கல்வி நிறுவனங்கள் உள்ளன. மொத்தம் 79 இந்திய பல்கலைகள் இந்த தரவரிசையில் இருக்கின்றன.

பொறியியலில் கனிமம் மற்றும் சுரங்கம் பாடத்தில் தன்பாத்தில் உள்ள ஐ.எஸ்.எம்., எனப்படும் இந்திய சுரங்கப் பள்ளி 20வது இடத்தையும், ஐ.ஐ.டி., மும்பை மற்றும் ஐ.ஐ.டி., கரக்பூர் முறையே 28வது மற்றும் 45வது இடங்களையும் பிடித்துள்ளன.

வணிக மேலாண்மை படிப்பில் ஐ.ஐ.எம்., ஆமதாபாத் மற்றும் ஐ.ஐ.எம்., பெங்களூரு முறையே 27 மற்றும் 40வது இடத்தில் உள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இவ்விரு நிறுவனங்களின் தரவரிசை குறைந்துள்ளது.

பெட்ரோலியம் பொறியியல் பாடப்பிரிவில் சென்னை ஐ.ஐ.டி., 31ம் இடம் பிடித்துள்ளது.

Advertisement