பும்ரா, மந்தனாவுக்கு விருது

புதுடில்லி: கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்களாக இந்தியாவின் பும்ரா, மந்தனா 'விஸ்டன்' விருது பெற்றனர்.
உலகின் பிரபலமான விளையாட்டு இதழ் 'விஸ்டன்'. கடந்த 1864 முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகிறது. முந்தைய ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த இதழில் இடம் பெறுவர்.
இந்த வரிசையில் 2024ம் ஆண்டு 'விஸ்டன்' இதழ் வெளியானது. இதில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'டி-20' உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றிக்கு 36 பந்தில் 40 ரன் தேவைப்பட்ட நிலையில் பும்ரா ஆதிக்கம் செலுத்தி, இந்தியாவை வெற்றிக்கு கொண்டு சென்றார். பைனலில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 30 பந்து, 30 ரன் தேவை என்ற சூழலில் பும்ரா மிரட்ட, 2013க்குப் பின் ஐ.சி.சி., தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது.
'டி-20' உலக கோப்பை தொடர் நாயகன் (15 விக்.,) ஆனார். 'பார்டர் கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் அசத்தினார். 2024ல் டெஸ்டில் மொத்தம் 71 விக்கெட் (சராசரி 14.92) சாய்த்தார். டெஸ்டில் குறைந்த சராசரியுடன் (20க்கும் கீழ்) 200 விக்கெட் சாய்த்த முதல் பவுலரானார் பும்ரா. இதையடுத்து 'விஸ்டன்' இதழின் சிறந்த வீரராக தேர்வாகியுள்ளார்.
சபாஷ் மந்தனா
சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 28, தேர்வானார். இவர் 2024ல் மட்டும் 1,659 ரன் எடுத்துள்ளார். மற்ற அனைவரையும் விட இது அதிகம். ஒருநாள் அரங்கில் ஒரு ஆண்டில் அதிக சதம் (4) அடித்தார்.
இவ்விருதை இரு முறை வென்ற முதல் இந்திய வீராங்கனை என பெருமை பெற்றார் மந்தனா (2018, 2024).
வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன், 2024ம் ஆண்டின் சிறந்த 'டி-20' வீரர் ஆனார்.
தவிர 2024ம் ஆண்டு இதழ் அட்டைப் படத்தில் இங்கிலாந்து அணிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட கேப்டன் ஹாரி புரூக் இடம் பிடித்துள்ளார்.

நான்காவது வீரர்
கடந்த 2003க்குப் பின் 'விஸ்டன்' இதழ் விருது வென்ற நான்காவது இந்திய வீரர் ஆனார் பும்ரா. முன்னதாக கோலி (2016, 2017, 2018) அதிகபட்சம் 3 முறை, சேவக் 2 முறை (2008, 2009), சச்சின் ஒருமுறை (2010) தேர்வாகினர்.

Advertisement