கடல் காற்றாலைகளில் இருந்து 2000 மெகாவாட் வாங்க முடிவு

சென்னை:''மின் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பத்தை அறிய, மின்துறை அமைச்சர் வெளிநாடு சென்றாரா,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

காங்., - ஹசன் மவுலானா: சூரியசக்தி, காற்றாலை தவிர, மின்சாரம் தயாரிக்க புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அடுத்தடுத்து வரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்க, வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை. வீட்டின் மாடியில் அமைக்கப்படும் சூரியசக்தி நிலையம் வாயிலாக கிடைக்கும் மின்சாரத்தை சேமிக்க, 'பேட்டரி' வசதியை மின் வாரியம் ஏற்படுத்தி தர வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனில், இந்தியாவிலே தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில், இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.

தமிழகத்தின் மொத்த மின் தேவையில், 50 சதவீதத்தை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக பெற வேண்டும். தென்மாவட்ட கடலில் அமைக்கப்படும் காற்றாலை திட்டத்திலிருந்து, ஒரு யூனிட் நான்கு ரூபாய் வீதம், 2000 மெகாவாட் மின்சாரம் வாங்க, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது

Advertisement