ஆசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் ருத்ராக் ஷ்

அம்மான்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை அரையிறுதிக்கு ருத்ராக் ஷ், ஹர்சில், மில்கி உள்ளிட்ட 6 இந்திய நட்சத்திரங்கள் முன்னேறினர்.

ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. 15 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதி நடந்தன. ஆண்களுக்கான 46 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ருத்ராக் ஷ், கிர்கிஸ்தானின் ஐதர் முசேவ் மோதினர். அபாரமாக ஆடிய ருத்ராக் ஷ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆண்களுக்கான 37 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஹர்சில் 5-0 என, துர்க்மெனிஸ்தானின் செர்டரோவை தோற்கடித்தார். ஆண்களுக்கான 49 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சஞ்சித் ஜயனி 5-0 என சீனதைபேயின் சென்-என் யுவை வென்றார்.

மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சன்ஸ்கர் வினோத் அத்ரம் (35 கிலோ), பிரிக் ஷித் பலஹ்ரா (40 கிலோ) வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

பெண்களுக்கான 43 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மில்கி மெய்னம் 5-0 என கஜகஸ்தானின் அப்திகானியை வென்றார்.

Advertisement