கால்பந்து: பெங்களூரு 'ஷாக்'

புவனேஸ்வர்: சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு இன்டர் காசி அணி முன்னேறியது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., மற்றும் ஐ-லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதன் ஐந்தாவது சீசனில் 15 அணிகள் மோதுகின்றன. 'நாக் அவுட்' முறையிலான இந்த போட்டிகள் அனைத்தும் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் ஐ.எஸ்.எல்., தொடரின் பைனலில் பங்கேற்ற பெங்களூரு அணி, ஐ-லீக் தொடரின் இன்டர் காசி அணியை சந்தித்தது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில், போட்டியின் 62 வது நிமிடத்தில் ரியான் டேல் வில்லியம்ஸ் ஒரு கோல் அடிக்க, பெங்களூரு அணி 1-0 என முன்னிலை பெற்றது.
போட்டியின் 87 வது நிமிடத்தில் இன்டர் காசி அணியின் மடிஜ்ஜா பாபோவிச் ஒரு கோல் அடித்தார். முடிவில் போட்டி 1-1 என சமன் ஆனது. அடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இதில் அசத்திய இன்டர் காசி அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. பெங்களூரு அணி வெளியேறியது.

Advertisement