ஒரு வேளை சாப்பாடு; ஒரே ஒரு உடை மதுரை தொழிலதிபருக்கு கொடுமை

மதுரை:''சொத்துக்காக கடத்தப்பட்ட என்னை, கடத்தல்காரர்கள் அடித்ததோடு, ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கொடுத்தனர். 12 நாட்களில் ஒரே ஒரு உடை மட்டுமே தந்தனர்,'' என, 12 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் தெரிவித்தார்.

மதுரை, நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கருமுத்து சுந்தரம், 58. இவருக்கு சொந்தமாக, திண்டுக்கல் மாவட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏக்கர் சொத்து உள்ளது.

இதை திண்டுக்கல் மரியராஜ், 70, என்பவர் அபகரிக்க திட்டமிட்டு, ஏப்., 6ல் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுந்தரத்தை கடத்தினார்.

வடமாநிலங்களில் சுற்றிய அவர்களை, மதுரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து, ஏப்., 18ல் மீட்டனர். இதுதொடர்பாக, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

நம் நிருபரிடம் சுந்தரம் கூறியதாவது:

கடத்தல் கும்பல் என்னை மஹாராஷ்டிரா, நாக்பூர், ஆந்திரா, பெங்களூரு என ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றனர். மருந்து, மாத்திரை எடுத்துச் செல்லாததால் சிரமப்பட்டேன். ஒரு வேளை உணவு மட்டுமே தந்தனர். அவர்கள் தினமும் மது அருந்தினர். என் கால்களில் கம்பை வைத்து அடித்தனர்.

பின், அவ்வப்போது அடிப்பது போல் மிரட்டி, தரையில் கம்பை ஓங்கி அடித்து பயமுறுத்தினர். நான் எதற்கும் பயப்படவில்லை. அவர்களிடம் இருந்த, 12 நாட்களில், ஒரே ஒரு புது ஆடை மட்டும் வாங்கிக்கொடுத்தனர். அதைத்தான் மாற்றி, மாற்றி அணிந்து சமாளித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement