குழந்தையை கொன்று எரித்த கொடூர தாய், தந்தை கைது

அரியலுார்:அரியலுார் அருகே சந்தேகத்தால் குழந்தையை கொன்று எரித்த தாய், தந்தையை போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் குப்பை கொட்டும் இடத்தில், 7ம் தேதி பாதி எரிந்த நிலையில் ஆண் குழந்தை உடலை மீட்டு, செந்துறை போலீசார் விசாரித்தனர்.
இதில், குழுமூர் ஹோட்டல் தொழிலாளி மதிவாணன், 35, அவரது மனைவி திவ்யா, 27, இருவரும் சேர்ந்து தங்கள் குழந்தையை எரித்துக் கொன்றது தெரியவந்தது.
தம்பதிக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக கர்ப்பமான திவ்யா, கர்ப்பத்தை மதிவாணனிடம் மறைத்தார். மதிவாணன் கேட்டதற்கு, வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறி வந்தார்.
இந்நிலையில், 6ம்தேதி இரவு, திவ்யாவுக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
சந்தேகமடைந்த மதிவாணன், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில், குழந்தை வேறு யாரோ போல உள்ளதாக திவ்யாவிடம் தகராறில் ஈடுபட்டு, குழந்தையை துாக்கி வீசினார். அப்போது, குழந்தை அழுதுள்ளது.
குழந்தை அழும் சத்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்கக்கூடாது என்பதற்காக, திவ்யா குழந்தை வாயில் துணியை திணித்துள்ளார்.
இதில், மூச்சு திணறி குழந்தை இறந்தது. இருவரும் சேர்ந்து அருகில் இருந்த குப்பையில் குழந்தையை வீசி தீ வைத்துள்ளனர்.
பாதி எரிந்த நிலையில் குழந்தையின் உடலை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார், மதிவாணன், திவ்யாவை நேற்று கைது செய்தனர்.