தண்ணீர் குடிக்க வந்த மான் நாய்கள் கடித்ததால் பலி

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் மற்றும் கன்னிகாபுரம் வனப்பகுதியில் அதிகளவில் புள்ளிமான்கள் மற்றும் மயில்கள் உள்ளன. நேற்று அதிகாலை, வனப்பகுதியில் இருந்து, புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக டி.புதுார் கிராம வயல்வெளிக்கு வந்தது.

அப்போது, கிராமத்தில் இருந்த நாய்கள் புள்ளிமானை கடித்து குதறியது. இதில், புள்ளிமான் பலத்த காயங்களுடன் வயல்வெளியிலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த திருத்தணி வனத்துறையினர், உயிரிழந்த புள்ளிமானை மீட்டு, திருத்தணி கால்நடை மருந்தகத்தில் பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.


வனத்துறையினர் அலட்சியம்




திருத்தணி வனத்துறை கட்டுப்பாட்டில், 2.500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் வனப்பகுதி காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில் வெயில் காலத்தில், விலங்குகளின் தண்ணீர் தாகம் தீர்ப்பதற்கு சிமென்ட் தொட்டிகள் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஆனால், வனத்துறையினர் தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால், வெயிலுக்கு தண்ணீர் தேடி மான், மயில் போன்றவை வயல்வெளியில் தண்ணீர் குடிப்பதற்கு வருகிறது. அப்போது, புள்ளிமான்களை நாய்கள் கடிப்பதால், காயமடைந்து வருகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன.

Advertisement