அரசியல் தலைவர்களின் வெறுப்பு பேச்சு முகாந்திரம் இல்லை என்றது அரசு தரப்பு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை:அரசியல் கட்சி தலைவர்களின் வெறுப்புணர்வு பேச்சுக்களை தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை அமிர்தபாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு:

சென்னையில் ஏப்.5 ல் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் மதம், பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மற்றொரு அரசியல் கட்சி தலைவர், 'மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவோம்,' என்றார். வேறொரு கட்சி தலைவர்,'திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவை பாபர் மசூதிபோல் ஆக்கிவிடுவோம்,' என்றார்.

மாற்று மதத்தினரின் நம்பிக்கை, கடவுள்களை அவமதிக்கும் வகையில் பொது வெளியில் கருத்துரிமையை தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால் சச்சரவுகள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கிறது. இவ்வாறு செயல்படும் கட்சி தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற வெறுப்புணர்வு பேச்சுக்களை தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்க வலியுறுத்தி டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முகாந்திரம் இல்லாததால் விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், இதில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மனு ஏற்புடையதல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

Advertisement