கிறிஸ்தவ மத போதகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

23

துாத்துக்குடி : ஓய்வு பெற்ற நீதிபதி காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட, கிறிஸ்தவ மத போதகர்கள், நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும் துாத்துக்குடி- நாசரேத் திருமண்டில நிர்வாகத்தை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கவனித்து வருகிறார். மே, 8ல் துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டயோசீசன் அலுவலக வளாகத்தில், ஜோதிமணியின் காரை வழிமறித்து, மத போதகர்கள் சிலர் தகராறு செய்தனர்.


இதில், ஜோதிமணியின் உதவியாளர் கருணாகரன் என்பவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக, அவர் துாத்துக்குடி ஏ.எஸ்.பி., அலுவலகத்திலும், வடபாகம் காவல் நிலையத்திலும், மத போதகர்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் மற்றும் சிலர் மீது புகார் அளித்தார்.


விசாரணை நடத்திய போலீசார், மத போதகர்கள் நான்கு பேர் மீதும், நிர்வாகியை தடுத்து நிறுத்துதல், ஆபாச வார்த்தைகளால் பேசி மோசமான செயல்களில் ஈடுபடுதல், தாகுதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


மத போதகர்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஆகியோர் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் ஆவர்.


அவர்கள் கவனித்து வந்த சர்ச் பணிகளை, உதவி மத போதகர்கள் கவனித்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த மத போதகர்கள் நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement