ராமதாஸ் பிளான்; பா.ம.க.,வினர் குஷி

14

மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பா.ம.க., சார்பில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: 10.5 சதவீதம் இடஒதுக்கீடு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் கொடுக்கிறபடி இல்லை. எனவே போராட்டத்தை அறிவியுங்கள் என்று எதிர்பார்த்து வந்திருக்கிறீர்கள் என்று தெரியும். நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாகத் தான் இருக்கும்.


ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் 100 ஓட்டுகள் என அந்த தொகுதியில் நாம் வெற்றி பெற முடியும். 50 தொகுதிகளில் நாம் சாதாரணமாக வெற்றி பெற முடியும். அதை நீங்கள் செய்யுங்கள். ஆனால் பலபேர் என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். உழைக்கவில்லை, உழைக்காமல் வேறு எதையோ செய்து கொண்டிருக்கிறீர்கள்.


தனியாக யானை சின்னத்தில் நின்று 4 தொகுதிகளில் அன்று வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். நமக்கு வெட்கமாக இல்லையா, அசிங்கமாக இல்லையா, கோபம் வரவில்லையா. ஆனால் கோபம் வரவில்லை. நம் சமூக மக்கள் நமக்கே ஓட்டுபோடவில்லை.


இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அப்படி என்றால் என்ன அர்த்தம், உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றாலும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன். சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறான்.


கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உனக்கு சீட்டு கிடைக்க வேண்டும், எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். உங்களின் கணக்கு எடுக்கப்படுகிறது. காக்கா பிடித்தால் ஒன்றும் நடக்காது.


2000 இளைஞர்கள், இளம்பெண்களை சேர்ப்பேன், ஒருவர் 50 ஓட்டுகள் சேகரித்தால் 1 லட்சம் ஓட்டுகள், வெற்றி உறுதி. இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு செல்லுங்கள். வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி. இனி, இது நடக்காது. நீ உன்னை திருத்திக் கொள்.


இன்னும் 4 அலைபேசி வைத்துக் கொள். ரியல் எஸ்டேட் பண்ணிக்கொள், பிழைத்துக் கொள். ஆனால் நீ இந்த கட்சியில் இருக்க முடியாது என பேசினார். கண்டிப்பான ராமதாஸ் பேச்சை கேட்டு பா.ம.க.,வினர் குஷியாயினர்.

Advertisement