தினமலர் செய்தி எதிரொலியாக 120 வயது தரைப்பாலத்திற்கு தீர்வு

திருபரங்குன்றம்: தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சந்திராபாளையம் - ஹார்விபட்டி இடையே சேதமடைந்து வரும் 120 வயது தரைப்பால பகுதியில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட உள்ளது.

சந்திராபாளையம் - ஹார்விபட்டி இணைப்பாக நிலையூர் கால்வாயின் குறுக்கே 120 ஆண்டுகளுக்கு முன் மதுரா கோட்ஸ் மில்லில் வேலை பார்ப்போர் ரயில்வே ஸ்டேஷன் செல்ல, வீடு திரும்ப வசதியாக நிலையூர் கால்வாய் மீது தரைப்பாலம் கட்டப்பட்டது.

தற்போது ஹார்வி பட்டியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்வோர் அந்த பாலம் வழியாக சந்திராபாளையம் தாண்டி செல்கின்றனர்.

அந்தப் பாலத்தின் அடிப்பகுதியில் கற்கள் பெயர்ந்து விழுகின்றன. முழுவதுமாக சேதமடைந்தால், ஹார்விபட்டியைச் சேர்ந்தவர்கள் 2 கி.மீ., சுற்றி திருப்பரங்குன்றம் செல்லும் அவலம் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து சேதமடைந்து வரும் அந்தத் தரை பாலத்திற்கு பதிலாக புதிதாக ஒரு தரைப்பாலம் கட்டப்பட உள்ளது. தற்போது நிலையூர் கால்வாயில் ரூ. 6.50 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட உள்ளது.

அப்பகுதியினர் கூறியதாவது: மதுரா கோட்ஸ் மில் துவங்கியபோது திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் வரை தொழிலாளர்களுக்காக தனியாக ரயில் விடப்பட்டது. அவர்களில் பலர் ஹார்விபட்டியில் குடியிருந்தனர். அவர்கள் பணிக்குச் சென்றுவர, இந்தப் பாலம் 120 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

நினைவு சின்னமாக இருக்கும் அந்த பாலத்தை பழமை மாறாமல் கட்ட வேண்டும் என்றனர்.

Advertisement