மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை; கோவிந்தா கோஷங்களை எழுப்பி பக்தர்கள் பரவசம்

மதுரை : சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் இறங்க அழகர்கோயிலில் இருந்து மதுரை வந்த கள்ளழகரை நேற்று அதிகாலை மூன்றுமாவடியிலும், மாலை தல்லாகுளத்திலும் பக்தர்கள் மேளதாளங்களுடன், சர்க்கரை சூடம் ஏற்றி பக்தி பரவசத்துடன் வரவேற்று தரிசனம் செய்தனர்.

அழகர்கோயில் கள்ளழகர் இன்று ( மே 12 ) அதிகாலை 5:45 முதல் 6:05 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக மே 10 ல் அழர்கோயிலில் புறப்பட்டு மதுரை வந்த கள்ளழகருக்கு நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மூன்றுமாவடியில் 'எதிர்சேவை' நடந்தது. தொடர்ந்து புதுார், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் உட்பட வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அவர் அருள்பாலித்தார்.

மாலை 4:40 மணிக்கு தல்லாகுளம் அவுட்போஸ்ட் அம்பலக்காரர் மண்டகப்படியில் எழுந்தருளினார். நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனம், பூஜை, தீபாராதனை நடந்தது. அங்கு தங்கக்குதிரை வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பட்டு அணிந்து எழுந்தருளினார்.

இன்று (மே 12) அதிகாலை கருப்பணசுவாமி கோயில் முன், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். வைகையில் எழுந்தருளும் நிகழ்வில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டாள் மாலை எதற்காக

பெருமாளை சுந்தரத் தோளுடையான்' என்று மங்களாசாசனம் பாடியுள்ளார் ஆண்டாள். சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் மண்டூக முனிவருக்கு மோட்சம் தருகிறார். இந்நிகழ்வில் ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கலப்பொருட்களையும் அழகிய தோள்கள் உடைய கள்ளழகர் ஏற்றுக்கொள்ள அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல் புரட்டாசி மாதம் திருப்பதிக்கும் மாலை, பட்டு அனுப்பப்படும்.

Advertisement