மரக்குதிரைக்கு பதில் தங்கக்குதிரை வந்தது

சோழவந்தான்:சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாளுக்கு மரக்குதிரைக்கு பதிலாக, புதிதாக செய்யப்பட்ட தங்கக் குதிரைக்கு கண் திறந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.
இங்குள்ள பெருமாள் கோயில் ஐந்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு இணைந்து காட்சி தருகிறார். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி, மதுரையைப் போல இங்கும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் முன்பு வெள்ளை நிற மரக் குதிரையில் வைகை ஆற்றில் பெருமாள் எழுந்தருளினார். தற்போது தங்கக் குதிரையில் இன்று (மே 12) காலையில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
புதிய தங்கக் குதிரைக்கு நேற்று காலை 6:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு கண் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. பார்த்தசாரதி, ஜெகநாதன், மணிகண்டன் பட்டர்கள் பூஜைகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், சத்யபிரகாஷ், அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.எஸ் ராஜாங்கம் துவங்கி வைத்தனர்.நிர்வாக அதிகாரி இளமதி, பூபதி முரளி ஏற்பாடுகளை செய்தனர்.