இரும்பு தண்டவாள தடுப்பு வேலி அமைத்து வனவிலங்குகளை தடுக்க வேண்டும்: விவசாயிகள்

கோவை,; வனவிலங்குகள் விவசாய விளை நிலங்களுக்குள், நுழைவதை தடுக்க ரயில்பாதைக்கு பயன்படுத்தும் இரும்பு தண்டவாளங்களை பயன்படுத்தி, தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் வலியுறுத்தினர்.

வனவிலங்குகள் விவசாய விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் நுழைந்து, சேதம் ஏற்படுத்துவதை தடுக்க, கோவையிலுள்ள வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில், இரும்பு முறுக்கு கம்பிவேலி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு, 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது.

போளுவாம்பட்டி வனச்சரகத்தில் 5 கி.மீ.,தொலைவிற்கும் கோவை வனச்சரகத்துக்குட்பட்ட, தொண்டா முத்துார் வன எல்லையில் 5 கி.மீ., தொலைவிற்கும் முள்வேலி அமைக்கும் பணி துவங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இயற்கை ஆர்வலர் முரளிதரன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வனத்துறை சார்பில், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒருசில விவசாய சங்கத்தினர் மட்டும் பங்கேற்ற, கருத்துக்கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

ஆனால் இக்கருத்து கேட்பு கூட்டத்துக்கு வருகை தந்த விவசாயிகள், ஒட்டுமொத்தமாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கருத்துக்கு, எதிராக கருத்து தெரிவித்தனர். கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாயி செந்தில்குமார் கூறுகையில், ''வனவிலங்குகள் வனத்தை விட்டு விளைநிலங்களுக்குள்ளும், குடியிருப்புகளுக்குள்ளும் நுழையாமல் தடுக்க, கர்நாடகா மற்றும் கேரள விளை நிலங்களில், ரயில்பாதைகளுக்கு பயன்படுத்தும், தண்டவாளங்களை போன்ற அமைப்புகளை வேலியாக அமைத்துள்ளனர். அங்குள்ள விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இந்த நடைமுறையை நாமும் பின்பற்றலாம்,'' என்றார்.

விவசாயி பழனிச்சாமி கூறுகையில், ''அரசு பரிந்துரை செய்துள்ள முட்கம்பிகளை பயன்படுத்தி வேலி அமைத்தால், அதில் விலங்குகள் மோதும் போது, உடலில் ரத்தக்காயம் ஏற்படும். மழை, வெயிலால் இரும்பு முறுக்கு கம்பிகள் துருப்பிடித்து வலுவிழந்துவிடும். அதனால் முறுக்குக் கம்பிகளுக்கு பதிலாக, ரயில் தண்டவாள அமைப்புகளை பயன்படுத்தலாம்,'' என்றார்.

அரசின், முறுக்கு கம்பி வேலி அமைக்கும் திட்டத்துக்கு, பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில், அரசு இவ்விவகாரத்தில் என்ன முடிவெடுக்கும் என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement