சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு சென்னை மண்டலம் 4ம் இடம்

சென்னை:சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 98.71 சதவீத தேர்ச்சியுடன், சென்னை மண்டலம் நான்காம் இடம் பிடித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்ரவரி, 15 முதல் மார்ச், 13ம் தேதி வரை நடந்தன. 26,675 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, 7,837 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதில், 23 லட்சத்து, 71,939 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில், 22 லட்சத்து, 2,636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 93.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது, கடந்தாண்டை விட, 0.06 சதவீதம் அதிகம்.

இதில், 95 சதவீத மாணவியர், 92.63 சதவீத மாணவர்கள், 95 சதவீத திருநங்கையர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக, 99.79 சதவீதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், 99.79 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் இரண்டாமிடத்தையும், 98.90 சதவீதத்துடன் பெங்களூரு மண்டலம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

அவற்றை தொடர்ந்து, 98.71 சதவீத தேர்ச்சியுடன், சென்னை மண்டலம் நான்காம் இடத்தை தக்க வைத்துள்ளது. ஐந்தாம் இடத்தில் புனே மண்டலம் உள்ளது.

அரசு பள்ளிகள்

மத்திய அரசு பள்ளிகளான ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், 99.49 சதவீத தேர்ச்சியையும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 99.45 சதவீத தேர்ச்சியையும், சுயநிதி பள்ளிகள், 94.17 சதவீத தேர்ச்சியையும் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

சென்னை மண்டலத்தில், 1,460 பள்ளிகளில் படித்த, 63,524 மாணவர்கள், 54,965 மாணவியர் என, மொத்தம் ஒரு லட்சத்து, 18,489 பேர், 348 மையங்களில் தேர்வெழுதினர்.

அவர்களில், 62,672 மாணவர்கள், 54,286 மாணவியர் என, ஒரு லட்சத்து, 16,958 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 98.66 சதவீத மாணவர்கள், 98.76 சதவீத மாணவியர் என, 98.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில்

தமிழகத்தை பொறுத்தவரை, 56,008 மாணவர்கள், 47,251 மாணவியர் என, ஒரு லட்சத்து, 3,259 பேர் தேர்வெழுதினர். அவர்களில், 55,911 மாணவர்கள், 47,206 மாணவியர் என, ஒரு லட்சத்து, 3,117 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 99.83 சதவீதம் மாணவர்கள், 99.90 சதவீதம் மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 99.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement