கொடுங்கையூர் குப்பை கிடங்கு நிலம் 2027 பிப்ரவரிக்குள் மீட்க மாநகராட்சி முயற்சி

சென்னை, 'சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், பயோ மைனிங் முறையில் குப்பை அகற்றும் பணி முடிந்து, 2027 பிப்ரவரிக்குள் நிலம் மீட்கப்படும்' என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொடுங்கையூர் குப்பை கிடங்கு, 250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சேகரமாகும் குப்பை, பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ளது.

இதனால், 66.52 லட்சம் டன் குப்பை, இங்கு கொட்டப்பட்டு இருப்பதால், கொடுங்கையூரை சுற்றிய பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது.

இவற்றால், அப்பகுதி மக்கள் சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 640.83 கோடி ரூபாய் மதிப்பில், அறிவியல் பூர்வமாக கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்டெடுக்கும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது.

குப்பை பிரித்தெடுத்து அகற்றும் பணியில், மூன்று நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

மந்த கதியில் நடந்த பணிகள் தற்போது வேகம் பெற்றுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் நிரந்தர மின் இணைப்பு வசதி இல்லாததால், பயோ மைனிங் பணிகளுக்கு, டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், பணிகள் தீவிரமடையவில்லை.

தற்போது, நிரந்த மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றால், தினமும் 4,950 டன் குப்பையை கையாள முடியும்.

பயோ மைனிங் முறையில் அகற்றப்படும் மண் ஆகியவை, சாலை சீரமைப்பு மற்றும் பள்ளங்களாக இருக்கும் பகுதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், ஜூன் 30க்குள் மீட்கப்பட்ட, 2 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க கோரியுள்ளோம். அங்கு, மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

இதுவரை, 11.06 லட்சம் டன் குப்பை, பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டுள்ளது.

குப்பை கிடங்கு முழுதும், 2027 பிப்ரவரிக்குள் மீட்கப்படும்.

கோடை காலத்தையொட்டி, தீ விபத்து ஏற்படாத வகையில், 24 மணி நேர நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், அவசரகால சூழலை கையாள, வாடகை அடிப்படையில், இரண்டு தண்ணீர் லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், 1.5 லட்சம் லிட்டர் கொள்ளவும் கொண்ட தண்ணீர் தொட்டியும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement