பாதாள சாக்கடை திட்டப்பணி... இழுபறி? செயல்பாட்டிற்கு வருவது எப்போது

திண்டிவனம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த திண்டிவனம் பாதாள சாக்கடை திட்டம் எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திண்டிவனம் நகராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 268 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது. இப்பணி 2023ம் ஆண்டில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் நிறைவு பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

பாதாள சாக்கடை திட்டத்திற்காக 33 வார்டுகளிலும், மேன்ஹோல் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. தீர்த்தகுளம், வெங்டேஸ்வரா நகர், அகழிகுளம், அவரப்பாக்கம், வகாப் நகர், இந்திரா நகர் ஆகிய 6 இடங்களில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையங்களிலிருந்து பைப் மூலம் கொண்டு செல்லப்படும் கழிவுநீர், சலவாதி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ கம்போசிங் மையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ கம்போசிங் மையத்திற்கு வரும் கழிவுநீர் அனைத்தும் சுத்திகரித்து கர்ணாவூர் பாட்டை கடைசி பகுதியிலுள்ள வாய்க்காலில் விடுவதற்கான பணிகள் முடிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த 28.1.2025ம் தேதி விழுப்புரம் வந்த முதல்வர் ஸ்டாலின், திண்டிவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாதாள சாக்கடை திட்டத்தை காணொளி மூலம் துவக்கி வைத்தார்.

முதல்வர் கையால் திறந்து வைத்து, 3 மாதம் கடந்தும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு பெறாமல் ஜவ்வு போல் இழுத்துகொண்டே செல்கிறது. திட்டம் முடிவடைந்து எப்போது, பயன்பாட்டிற்கு வரும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை 9 மண்டலங்களாக பிரித்து பணிகளை மேற்கொண்டது. இதில் பிராதன கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையமான, சலவாதி சாலை, நகராட்சி மின்தகன மையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கு, நகரத்தின் மற்ற 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துணை கழிவு நீர் நிலையத்திலிருந்து பைப் மூலம் கொண்டு வரப்படுகின்றது.

இதற்காக பல இடங்களில் பைப் லைன் புதைக்கும் பணி, புதிய தார் சாலை போடும் பணிகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக ஜெயபுரம், ஜி.எஸ்.டி.ரோட்டில் பைப் லைன் புதைப்பதில் நிலத்தின் உரிமையாளருடன் சிக்கல் உள்ளிட்டவைகளால் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. இப்பிரசனைகள் எல்லாம் 2 மாதத்திற்குள் முடிந்து விடும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி முடிந்த பின்பு, நகராட்சி சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கும், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்கான கட்டணம் நிர்ணயம் செய்து, டெண்டர் வெளியிடப்படும். நகராட்சியில் மட்டும் 19,230 பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். இந்த இணைப்புகளுக்க, வீட்டின் உரிமையாளர் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் பிறகுதான், பாதாள சாக்கடை இணைப்பு ஒவ்வொரு வீட்டிற்கு கொடுக்கப்படும். நகராட்சி சார்பில் இணைப்பு கட்டணம் குறித்து டெண்டர் வெளியிடவில்லை. இதனால் திண்டிவனத்தில் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement