நெல் கொள்முதல் செய்த பணம் வங்கியில் செலுத்தாததால் விரக்தி
சென்னை, கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வங்கி கணக்கில் செலுத்தாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலர் துரைசாமி வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் மற்றும் திருக்கழுக்குன்றத்தில், என்.சி.சி.எப்., எனும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக, நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஒரு மாதமாகியும் அதற்கான பணத்தை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்த விவசாயிகள், அந்த பணத்தை பெற்று, கடனை அடைக்க முடியாத சூழல் உள்ளது.
குடும்ப செலவு மட்டுமின்றி, தங்கள் குழந்தைகள் கல்வி செலவிற்கு, மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த போக சாகுபடிக்கு பணம் இல்லாமல், பல விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திடம் இருந்து பெற்று தருவதற்கு மாவட்ட கலெக்டர், தமிழக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.