புகாரில் சிக்கிய ஊராட்சி செயலர் மாற்றம் பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

பல்லடம்,:திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்தில், 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் செயலராக பணியாற்றும் சிலர், சமீபத்தில், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வகையில், கணபதிபாளையம், வடுகபாளையம்புதுார், சித்தம்பலம், புளியம்பட்டி, அனுப்பட்டி, கரடிவாவி ஆகிய ஊராட்சி செயலர்களும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்களில், கணபதிபாளையம் ஊராட்சி செயலர் பிரபு சங்கரை, காத்திருப்போர் பட்டியலில் வைக்க கலெக்டர் பரிந்துரையின் பேரில், பல்லடம் பி.டி.ஓ., கனகராஜ் உத்தரவிட்டார். அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் வடுகபாளையம்புதுார் ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டார். இதையறிந்த கணபதிபாளையம் கிராம பொதுமக்கள், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக கணபதிபாளையம் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த ஊராட்சி செயலர் பிரபு சங்கர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

குறிப்பாக, 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில், வீட்டில் இருப்பவர்கள் பெயரில் அட்டை போட்டு முறைகேடாக சம்பளத்தை எடுத்து வந்துள்ளார். கனவு இல்லம் திட்டத்தில், பயனாளிகளிடம், குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்ட பின்னரே அனுமதி வழங்கினார். இவ்வாறு, பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான இவரை பணியிலிருந்து விடுவித்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, பிரபு சங்கர் கூறுகையில், ''என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன்,'' என்று மட்டும் கூறினார்.

முன்னதாக, பிரபுசங்கரை பணியிலிருந்து விடுவித்ததை கண்டித்து, கணபதிபாளையம் ஊராட்சியில் வேலை பார்க்கும் இதர பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement