வி.ஏ.ஓ., வீட்டில் 34 பவுன், ரூ. 50 ஆயிரம் கொள்ளை
கரூர், கரூர் அருகே, வி.ஏ.ஓ., வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை தெற்கு காந்தி கிராமம் கே.கே., நகரை சேர்ந்தவர் திலீபன், 36; சின்னதாராபுரம் அருகே, அணைப்பாளையத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 12ல் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுள்ளார். பிறகு, நேற்று முன்தினம் திலீபன் வீட்டுக்கு வந்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 34 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து, திலீபன் கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவக்குளம் ஏரியை துார் வாரவிவசாயிகள் வலியுறுத்தல்
கரூர், கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள, கோவக்குளம் ஏரியை துார் வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் கோவக்குளம் அருகே, 200 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. நாளடைவில் பருவமழை இன்றி, தண்ணீர் வரத்து நின்றுபோனதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. ஏரியில் தற்போது முள்செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது.
சேங்கல் பகுதி காட்டுவாரி, நீண்ட நாட்களாக துார் வாரப்படாததால், தண்ணீர் வருவதில் தடை ஏற்படுகிறது. ஏரியில் அதிகமாக மண் திட்டுகள் இருப்பதால், ஏரிக்கு வரும் மழை நீரும், ஆங்காங்கே நிற்கிறது. ஏரியை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை.
ஏரி முழுவதையும் துார்வாரி, மழைநீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம், மணவாசி பஞ்சாயத்து பகுதிகளில், காவிரி குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மணவாசி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோரக்குத்தி, நத்தமேடு ஆகிய பகுதி மக்களுக்கு, பஞ்சாயத்து சார்பில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் இருந்து, காவிரி குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு, போதுமான தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் காவிரி நீர் வரும் வழித்தடங்களில், கூடுதல் இணைப்பு இருப்பதால் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் குறைவாக கிடைக்கிறது. எனவே, காவிரி குடிநீர் மக்களுக்கு முறையாக செல்லும் வகையில் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.