ரூ.6.60 கோடியில் கட்டிய உயர்மட்ட பால பணி ஆய்வு



சூளகிரி, சூளகிரி அருகே காமன்தொட்டியில் இருந்து, டோரிப்பள்ளி வழியாக அத்திமுகம் கிராமத்திற்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில், 6.60 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, நெடுஞ்சாலைத்துறையின் உள் தணிக்கை குழு தலைவரும், சேலம் கண்காணிப்பு பொறியாளருமான சசிகுமார் தலைமையில், தர்மபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ், உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள்
இனியவன், கிருபாகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
பாலத்தில் மேல்தளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வரும் நிலையில், ஆய்வு பணியை மேற்கொண்ட குழுவினர், பாலத்தின் கான்கிரீட் உறுதித்தன்மை, சிமென்ட் கலவையின் தரம் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்தனர். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து, பாலத்தை வாகன பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டனர். ஆய்வின் போது, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் லோகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement