சீராப்பள்ளி தினசரி சந்தைக்கு தனி இடம் ஒதுக்க கோரிக்கை



நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தையொட்டி அதிகளவு கிராமங்கள் உள்ளன. நாமகிரிப்பேட்டையில் வாரந்தோறும் நடக்கும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தையை விட்டால், காய்கறி வாங்க பெரியளவில் கடைகள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து, சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில், விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை விற்க தொடங்கினர். பஸ் ஸ்டாப்பிற்கு அருகே, வடுகம் சாலையை ஒட்டி காய்கறிகளை விற்று வருகின்றனர். விவசாயிகள் தொடங்கிய இந்த சந்தை, தினசரி சந்தையாக மாறிவிட்டது.

இதையடுத்து, பஸ் ஸ்டாப்பிற்கு அருகே டவுன் பஞ்., நிர்வாகம் காய்கறி விற்க கடைகளை கட்டியது. ஆனால், அதில் யாரும் கடைவைப்பதில்லை. சாலையை ஒட்டியே கடையை வைத்துக்கொள்கின்றனர். ஆத்துார் பிரதான சாலையில் மிகவும் குறுகிய இடத்தில் இந்த தினசரி மார்க்கெட் உள்ளதால், காலை நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் அடிக்கடி விபத்தும் நடந்து விடுகிறது. வயதானவர்கள் சாலையை கடப்பதற்குள் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விடுகின்றன.
எனவே, சீராப்பள்ளி தினசரி சந்தைக்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக போக்குவரத்து தொந்தரவு இல்லாமல் திறந்த வெளியில் உள்ள இடம் ஒதுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement