குண்டும், குழியுமான நந்தியம்பாக்கம் சாலை சிரமத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமிநகர், சூர்யா அவென்யூ, காயத்ரி நகர், மாரியம்மன் நகர், இருளர் பகுதி, திருவுடையம்மன் நகர், ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளில், 300க்கும் அதிகமான குடியிருப்பு உள்ளன.

நந்தியம்பாக்கம் விநாயகர் கோவில் பகுதியில் இருந்து, குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும், 2 கி.மீ., தொலைவிற்கான இந்த பிரதான சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் கரடு முரடாக உள்ளது.

மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தினரால் பராமரிக்கப்படும் இந்த ஒன்றிய சாலையை சீரமைத்து தரக்கோரி மேற்கண்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் பயனில்லை. இதனால் அவர்கள் விரக்தி அடைந்து உள்ளனர்.

இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:

நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் செல்வதற்கும், கல்வி, மருத்துவ வசதிகளுக்கும் செல்ல இந்த பிரதான சாலையை பயன்படுத்த வேண்டும். சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம். வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன.

குறிப்பாக டயர்கள் பஞ்சர் ஆவதும், தேய்ந்து போவதும் தொடர்கிறது.

இந்த பிரதான சாலையை சீரமைத்தால் குடியிருப்புவாசிகளுக்கும், அத்திப்பட்டு பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement