காபி இடைவேளைக்கு செல்லும் நீதிபதிகள்; ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

8

புதுடில்லி : வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2022ல் தீர்ப்பை ஒத்திவைத்தது.


உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக முடிவு எடுக்க உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சமீபத்தில் அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.


இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:

இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பில், தற்போதுதான் அவர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.


மேலும், தீர்ப்பு தேதி எப்போது ஒத்திவைக்கப்பட்டது என்பதை உத்தரவில் குறிப்பிடாததால், அவர்கள் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தாமதங்களால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தேவையில்லாமல் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது தனிமனித உரிமைக்கு எதிரானது.


மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடிக்கடி காபி இடைவேளைக்கு செல்வதாக புகார்கள் வந்துள்ளன. இதில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது அவர்களின் பணித் திறனுடன் தொடர்புடையது. இதில் கட்டுப்பாடுகள் தேவை. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து, எத்தனை வழக்குகளில் நீண்ட காலமாக தீர்ப்பு பிறப்பிக்கப்படாமல் உள்ளது போன்ற தகவல்களை அளிக்க உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement