தாம்பரம் --- நாகர்கோவில் சிறப்பு ரயிலைதினமும் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
விருதுநகர்:தாம்பரம் -- நாகர்கோவில் சிறப்பு ரயிலை தினமும் இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தாம்பரத்தில் இருந்து (22657) சிறப்பு ரயில் திங்கள், புதன், ஞாயிறு கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7:00 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் (22658) சிறப்பு ரயில் திங்கள், செவ்வாய், வியாழன் கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5:05 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில்களில் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அதிக பயணிகள் பயணிக்கின்றனர். கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்லா நாட்களிலும் கூட்டம் அதிகம் இருப்பதால் தென்மாவட்ட மக்கள் முன்பதிவு செய்து பயணிக்க சிரமப்படுகின்றனர். அனந்தபுரி ரயிலுக்கு முன்னதாக புறப்படும் தாம்பரம் -- நாகர்கோவில் சிறப்பு ரயில் தென் மாவட்ட மக்களின் பயணத்திற்கு ஏதுவாக உள்ளது. எனவே தாம்பரம் -- நாகர்கோவில் சிறப்பு ரயிலை தினமும் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.