பயங்கரவாதிகள் மூன்று பேர் என்கவுன்டரில் பலி 

சோபியான்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில், மூன்று பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஷோகல் கெல்லர் என்ற பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்படி, அந்த பகுதியை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

உயிரிழந்தவர்கள், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது.

Advertisement