பெண்ணிடம் ரூ.17 லட்சம் மோசடி திருச்சி வாலிபர் கைது

நாகர்கோவில்:ஆன்லைன் உணவு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை காட்டி வாட்ஸ் ஆப் லிங்க் மூலம் பெண்ணிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக திருச்சி வாலிபர் வெங்கடேைஷ 35, கேரள போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. இவரது அலைபேசி எண்ணுக்கு ஒரு ஆன்லைன் உணவு நிறுவனத்தின் பேரில் வாட்ஸ் ஆப் லிங்க் வந்தது. அந்நிறுவன உணவுகளுக்கு அதிகபட்ச ரேட்டிங் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி ஷீபா அதிக ரேட்டிங் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று ரூ.2000 அனுப்பப்பட்டது. இதையடுத்து ஷீபாவிடம் நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் உடனுக்குடன் பணம் கிடைக்கும் என கூறினர். அதை நம்பி ஷீபா முதலில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தார். சில நாட்கள் இடைவெளியில் அவருக்கு ரூ.பத்தாயிரம் ஊக்கமளிப்பதாக வந்தது. இதனால் அவர் தொடர்ச்சியாக ரூ.17 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அதன் பின் ஷீபாவுக்கு பணம் வரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணையில் திருச்சி மாவட்டம் அன்பு நகர் பகுதியில் சேர்ந்த வெங்கடேஷ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையில் அவர் வெளிநாடு தப்பியதும் தெரிய வந்தது. அவரை பிடிக்கும் வகையில் எர்ணாகுளம் போலீசார் லுக் அவுட்நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர். வெங்கடேஷ் திருச்சி திரும்பியதையறிந்த கொச்சி போலீசார் அங்கு சென்று வெங்கடேஷை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement