விபத்தில் சிக்கியோருக்கு சிகிச்சை; நேர்மையுடன் செயல்படுத்த அறிவுரை

புதுடில்லி : சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை முழுமையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், 1.50 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் சட்டப் பிரிவு, மோட்டார் வாகனச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
கடந்த, 2022ல் இந்த பிரிவு சேர்க்கப்பட்டாலும், செயல்படுத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக விசாரித்த, உச்ச நீதிமன்றம், கடந்த ஜன., 8ல் இந்த சட்டப் பிரிவை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த, ஏப்., 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
சாலை விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காததுடன், கால அவகாசம் நீட்டிப்பும் கோராததற்கு கடுமையாக விமர்சித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, சாலை விபத்தில் சிக்குவோருக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வழங்கும் திட்டம், கடந்த, 5ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புய்யான் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த திட்டத்தை முழுமையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்த வேண்டும் என, அமர்வு அறிவுறுத்தியது.
திட்டத்தை செயல்படுத்தியது தொடர்பாகவும், அதனால் பயனடைந்தோர் தொடர்பான விரிவான அறிக்கைகளை, ஆக., மாத இறுதியில் தாக்கல் செய்யும்படியும் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகனங்களில் செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் அடையும் அனைவரும், இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைக்கான தகுதி பெறுவர் போலீஸ், மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், தேசிய சுகாதார ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்தும் விபத்து நடந்த நாளில் இருந்து முதல் ஏழு நாட்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையில் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே இந்த இலவச சிகிச்சை அளிக்கப்படும். பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் முதலுதவிக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்.
மேலும்
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!
-
இழப்பீடு வழங்க தாமதப்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு
-
4 விவசாயிகளுடன் நடந்த குறைதீர்க்கும் கூட்டம்