'காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் தேவையில்லை'

புதுடில்லி: 'காஷ்மீர் பிரச்னைக்கு யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை' என, நம் வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
நம் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடிப்படையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம், 1960ல் கையெழுத்தானது. இது, அந்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்.

ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் நீண்டகால நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தமும் தேவை இல்லை.

காஷ்மீரில் சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை விடுவிப்பது தான் நிலுவையில் உள்ள பிரச்னையாக உள்ளது.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் கட்டுப்பாடு, அங்குள்ள தேசிய கட்டளை ஆணையத்தின் பொறுப்பில் உள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 10ம் தேதி அவசர கூட்டத்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரே மறுத்தார்.

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது. அதே போல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் அனுமதிக்க மாட்டோம். இதில் உறுதியுடன் உள்ளோம்.

அணு ஆயுதத்தை பாகிஸ்தான் கையில் எடுத்தால், அது அவர்களின் சொந்த பிராந்தியத்தையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கையை உலக நாடுகளுடனான பேச்சின் போது கூறினோம். போரை நிறுத்தும் விஷயத்தில் வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவிடம் எதுவும் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement