எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி

1

புதுடில்லி: ''எந்த ஒரு பதவியையும் ஏற்க மாட்டேன்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற, சஞ்சீவ் கன்னா குறிப்பிட்டார்.

கடந்த, 2019ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சீவ் கன்னா, கடந்தாண்டு நவம்பரில் தலைமை நீதிபதியானார். நேற்றுடன் அவர் பணி ஓய்வு பெற்றார்.

நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

பணி ஓய்வுக்குப் பின் எந்த ஒரு பதவியையும் ஏற்க மாட்டேன். சட்ட துறையில் என்னுடைய மூன்றாவது இன்னிங்சை தொடர திட்டமிட்டுள்ளேன். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது.

நீதி வழங்கும்போது, மிகவும் உறுதியாகவும், கேள்விகள் எழுப்பாத வகையிலும் உத்தரவுகள் இருக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் முடிவுகள் எடுக்கும்போது, அதில் சில நிறை, குறைகள் இருக்கலாம். ஆனால், நாம் சரியான முடிவு எடுத்துள்ளோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்கிறார்.

Advertisement