ராணுவ கிடங்கில் குண்டு வெடிப்பு; இந்தோனேஷியாவில் 13 பேர் பலி

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் காரூட் மாவட்டத்தில் உள்ள கிராமம் சகாரா. இங்குள்ள ராணுவ வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் காலாவதியான வெடிபொருட்களை அகற்றும் பணியில் ராணுவத்தினர், நேற்று ஈடுபட்டனர். அப்போது திடீரென வெடிபொருள் வெடித்து சிதறியது.

தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், வானத்தில் கரும்புகையுடன் தீப்பிழம்புகள் பரவியதால், அப்பகுதியில் பீதி நிலவியது.

அடுத்தடுத்து ஏற்பட்ட இரு வெடி விபத்துகளில் சிக்கி, நான்கு ராணுவ வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் என, 13 பேர் பலியாகினர்; சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கிரிஷ்டோமி சியாந்துரி கூறுகையில், ''காலாவதியான வெடிபொருட்களை அகற்றும் போது விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என ஆய்வு செய்யப்படுகிறது.

''மேலும், வெடிபொருட்களை அகற்றும்போது கிடைக்கும் இரும்புகள், செம்பு பொருட்களை எடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்திருந்த நிலையில் இரண்டாவது வெடி விபத்து ஏற்பட்டது,'' என்றார்.

Advertisement