அதிகரிப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார் 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகராகும். தேர்வுநிலை பேரூராட்சி அந்தஸ்தில் 18 வார்டுகளுடன் உள்ளது. நகர் முழுவதும் சாலையோரங்களில் கழிவுநீர் வடிகால் உள்ளது. 40 கி.மீ. நீளமுள்ள இந்த வாய்க்கால் பல இடங்களில் முழுமை பெறாமல் உள்ளது.

தினசரி 15 லட்சம் லி. கழிவுநீர் ஓடி வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளது. இத்துடன் பெரிய கண்மாயிலிருந்து செல்லும் பாசனக் கண்மாய்களும் நகரின் பல பகுதிகளில் கடந்து செல்கிறது. குடியிருப்புக்களின் கழிவு நீரும் சேர்ந்து கழிவுநீர் குட்டைகளாக மாறி விட்டன. இதனால் நகரில் சுகாதாரக் கேடு அதிகரித்துள்ளது.

இதை பராமரிக்கும் அளவிற்கு பணியாளர்களோ, இயந்திர வசதிகளோ பேரூராட்சியிடம் இல்லை.

முக்கியமான ரோடுகளில் மட்டும் வடிகாலில் தேங்கும் குப்பை அகற்றப்பட்டு பெயரளவில் பராமரிக்கப்படுகிறது. நகர் முழுவதும் தேங்கும் கழிவுநீரால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். மழை பெய்யும் போது மட்டுமே கழிவுநீர் வெளியேறுவதாகவும், மற்ற நாட்களில் தேங்கி நாற்றமடிப்பதால் சிரமத்திற்குள்ளாவதாகவும், இதனால் கொசுக்கள் அதிகரித்து மாலை நேரங்களில் அவதிப்படுவதாகவும், கொசு மருந்தே அடிப்பதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நகரின் பெரும்பாலான வடிகால்களிலிருந்து வரும் கழிவுநீர் தென்மாப்பட்டு அட்டக்குளத்தில் சேகரமாகிறது.

இதனால் அப்பகுதி துர்நாற்றத்துடன் சுகாதாரக் கேடாக உள்ளது. இக்குளத்தில் உள்ள கழிவுநீர் இயந்திரமும் செயல்படவில்லை. முன்பு 6 லட்சம் லிட்டர் கழிவு நீர் தினசரி சுத்திகரிக்கப்பட்டது. அப்பகுதியில் நிலத்தடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சியிடம் பல ஆண்டுகளாக குடியிருப்பு வாசிகள் கோரி வருகின்றனர்.

பேரூராட்சி தரப்பில் கூறுகையில், தற்போது நடைபெறும் குடிநீர் திட்டம் முடிந்தவுடன் வடிகால் இல்லாத இடங்களில் புதிதாகவும், சேதமடைந்த வடிகால் சீரமைக்கப்படும். முற்றுப்பெறாத கால்வாய்கள் நீட்டிக்கப்படும். முதற்கட்டமாக ரூ 5 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க 20 பணியாளர்கள் மழை நீர் தேங்காத வண்ணம் பணியாற்றி வருகின்றனர். நகர் முழுவதும் பரவலாக கொசு மருந்து அடிக்கப்படும்.

அட்டக்குளம் ரூ 38 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும். கழிவு நீர் கலக்காமல் வேறிடத்திற்கு வெளியேற்ற தனி வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

சுற்றிலும் நடைபாதை, சாலையோரம் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றப்படும்' என்றனர்.

Advertisement