அர்ச்சகர் நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

ஆகம விதிகளுக்கு முரணாக, கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரிஅனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை, 2006ல் தமிழக அரசு பிறப்பித்தது.அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி வாயிலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தற்போது வரை முறையான பணி நியமனம் நடைபெறவில்லை. ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால்,தற்போது வரை அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற நுாற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படாமல் உள்ளனர்.
இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடித்து, உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கில் தங்களது தரப்பின் இந்த புதிய இடையீட்டு மனுவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -