காங்கோவில் வெள்ளம்: 60 பேர் பலி

பிரசாவில்லி: காங்கோ நாட்டில் வெள்ளத்திற்கு, 60 பேர் இறந்துள்ளனர். காலரா நோய் தாக்கத்திற்கு மத்தியில் பல இடங்களில் வெள்ளம் அபாய மட்டத்தில் பாய்வதால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களில், 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. ஏராளமானோரை காணவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், மேலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புகளிடம் அந்நாடு உதவி கோரியுள்ளது.

இதற்கிடையே, காங்கோவின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக கட்டுக்கடங்காத காலரா நோய் பரவியுள்ளது. அதற்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வெள்ளம், காலரா நோய்க்கு மத்தியில், உள்நாட்டு சண்டையால் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வடக்கு கிவு மாகாணத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்துள்ளனர்.

மொத்தத்தில் காலரா நோய், கடும் வெள்ளம் மற்றும் உள்நாட்டு சண்டை போன்ற பல காரணங்களால், கடந்த பிப்ரவரியில் இருந்து இப்போது வரை, 1.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Advertisement