மதுரையில் சர்வதேச நீச்சல்குளம் என்ற அறிவிப்பு; 2 ஆண்டுகளாகியும் எந்த முயற்சியும் இல்லை

1

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.6 கோடியில் சர்வதேச நீச்சல் குளம் அமைக்கப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்து இரண்டாண்டுகளாகியும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இங்கு 2009ல் 25 மீட்டர் நீளத்தில் 8 வரிசையில் போட்டியாளர்கள் பங்கேற்கும் வகையில் நீச்சல்குளம் அமைக்கப்பட்டது. வழக்கமாக 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் பட்டர்பிளை ஸ்ட்ரோக், ப்ரீஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுகளில் தனிநபர் போட்டிகளும் குழுவாக தொடர் ஓட்டப் போட்டிகளும் நடத்தப்படும்.

50 மீட்டர் போட்டிகளை கூட இங்கு 25 மீட்டர் வீதம் மாணவர்கள் இருசுற்றுகளாக திரும்பிச் சென்று போட்டியை முடிக்கின்றனர்.

இதுவே 100 மீட்டராக இருந்தால் நான்குமுறை திரும்பிச் சென்று முடிக்கும் போதே கூடுதல் வினாடிகள் எடுக்கப்படுகின்றன. இதனால் மாநில நீச்சல் போட்டியுடன் இந்த நேரத்தை ஒப்பிட முடியாது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை வேளச்சேரி நீச்சல்குளத்திலும் திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகத்திலும் 50 மீட்டர் சர்வதேச நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ரூ.6 கோடியில் இப்போதுள்ள நீச்சல் குளம் அல்லது இளையோர் விடுதி அருகிலுள்ள இடத்தில் 50 மீட்டர் குளம், பார்வையாளர் காலரி, கழிப்பறை, குளியலறை, உடை மாற்றும் அறை வசதிகளுடன் அமைக்கப்படும் என அறிவித்து இரண்டாண்டுகளாகிறது.

இன்னும் அதற்கான எந்த முயற்சியும் நடக்கவில்லை என்கின்றனர் பயிற்சியாளர் மற்றும் மாநில வீரர், வீராங்கனைகள்.

அவர்கள் கூறியதாவது:

50 மீட்டர் நீச்சல்குளத்தில் பயிற்சி பெறும் போது நேரத்தை சரியாக கணக்கிட்டு அதை குறைப்பதற்கு முயற்சி செய்து வெற்றி பெற முடியும். 25 மீட்டர் குளத்தில் எவ்வளவு வேகமாக நீந்தினாலும் திரும்பும் போது சில விநாடிகள் வீணாவதை தவிர்க்க முடியாது.

மேலும் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டுமெனில் சென்னை அல்லது பெங்களூருவில் கட்டணம் செலுத்தி தான் பயிற்சி பெறுகிறோம். மதுரையில் அமைந்து விட்டால் மதுரை மட்டுமல்ல தென்மாவட்ட வீரர், வீராங்கனைகளும் பயன்பெறுவர்.

அரசுப் பள்ளி மாணவர்களும் நீச்சலில் தனிநபர் சாதனை படைத்து அரசு வேலை வாய்ப்பு பெறமுடியும்.

ஒலிம்பிக் அகாடமி என்ற பெயரில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கபடி, டேபிள் டென்னிஸ், ஜிம் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. நீச்சல்குளமும் அமைந்தால் மதுரை அனைத்திலும் சிறந்து விளங்கும் என்றனர்.

Advertisement