தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகுமா?

4

மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், பிசியாலஜி துறைகளில் இரண்டாண்டுகளாக பேராசிரியர் பதவி உயர்வுக்கான பேனல் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து 34 அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய மருத்துவ கவுன்சில் (என்.எம்.சி.,) நோட்டீஸ் வழங்கியுள்ளதால் உயர்மட்ட குழுவை அமைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வை என்.எம்.சி., மேற்கொண்ட போது சென்னை, கோவை தவிர மீதி கல்லுாரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை, குறைந்த வருகைப்பதிவேடு உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டது. 24 கல்லுாரிகள் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. மதுரை உட்பட தென்மாவட்ட கல்லுாரிகளுக்கு இன்னும் ஒருவார காலம் அவகாசம் உள்ளது. இதுதொடர்பாக நோட்டீஸ் வழங்கியதால் கல்லுாரியின் அங்கீகாரம் ரத்தாகாது, மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்பட வாய்ப்பில்லை என மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது: தேவையான அளவு பேராசிரியர்களோ, உள்கட்டமைப்பு வசதிகளோ இல்லாமல் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது என்பதைத் தான் என்.எம்.சி., நோட்டீஸ் உறுதிப்படுத்துகிறது. அதேநேரத்தில் கல்லுாரிகளைப் பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.ஒருகோடி வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

சில இடங்களில் டீன்கள் நியமனம் இருந்தாலும் அடுத்தடுத்த பதவிகளில் மருத்துவ கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. நான்கு இணைப்பேராசிரியர்கள் பணியிடங்கள் இருந்தால் ஒருவர் மட்டுமே அப்பணியில் உள்ளார்.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், மயக்கவியல், பிசியாலஜி துறைகளில் பேராசிரியர் பணியிடங்களை பொறுத்தவரையில் இரண்டாண்டுகளாக பேராசிரியர் பதவி உயர்வுக்கான பேனல் அமைக்கப்படவில்லை. பதவி உயர்வை சரியான நேரத்தில் வழங்கியிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது.

இளையோர் பாதிப்பு



இதனால் முதுநிலை படித்துள்ள இளம் டாக்டர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கூடுதல் சம்பளமே வழங்காமல் ஒப்பந்த முறையில் இரண்டாண்டு காலத்திற்கு முதுநிலை டாக்டர்களை நியமிக்கலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் படித்து முடித்து வெளியேறும் முதுநிலை டாக்டர்களை இம்முறையில் ஒப்பந்தம் செய்தால் 75 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்பலாம். இதை செய்யவிடாமல் சிலர் வயது நீட்டிப்பை கொண்டு வரவே விரும்புகின்றனர். தமிழக அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து முழுமையாக ஆய்வு செய்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.

Advertisement