பயணிகள் தள்ளிய அரசு பஸ் ஓட்டை உடைசலுக்கு தீர்வு எப்போது

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் இருந்து புறப்பட்ட அரசு டவுன் பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் தள்ளிவிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் டெப்போவில் இருந்து சிங்கம்புணரிக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

நேற்று சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் வந்த பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு நத்தம் புறப்பட்டது. பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்த சில மீட்டர் தூரத்தில் பழுது காரணமாக பஸ் நகரவில்லை. பல மணி நேரம் போராடியும் டிரைவரால் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.

இதை தொடர்ந்து பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு அவர்களும் நடத்துனரும் சேர்ந்து பஸ்ஸை முன்னும், பின்னும் சில மீட்டர் தூரம் தள்ளிப் பார்த்தனர். பல மணி நேரம் தள்ளியும் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை.

இதைத் தொடர்ந்து பயணிகள் வேறு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். பஸ் மீண்டும் பஸ் ஸ்டாண்டுக்கு தள்ளிவரப்பட்டு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டது. சிங்கம்புணரிக்கு திருப்புத்தூர், மேலூர், பொன்னமராவதி, நத்தம் உள்ளிட்ட டெப்போக்களில் இருந்து பல டவுன் பஸ் இயக்கப்பட்டாலும், பெரும்பாலானவை காலாவதியான ஓட்டை உடைசல் பஸ்களாகவே இருக்கிறது.

பல நேரங்களில் பஞ்சர், பழுதால் அடிக்கடி நடுவழியில் நின்று விடுகிறது. எனவே தரமான பேருந்துகளை இப்பகுதிக்கு இயக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement