பரவை வைகை ஆற்றில் மண் திருட்டு

வாடிப்பட்டி: பரவை பவர் ஹவுஸ் சாமிநாதன் நகர் வைகை ஆற்றின் நடுவே மணல் அள்ளும் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மண் திருட்டு நடந்துள்ளது.

இங்குள்ள வைகை வடகரை பகுதியில் ரூ.176 கோடியில் தார் சாலை அமைக்க முதல் கட்ட பணி நடந்து வருகிறது. ஆற்றின் மைய பகுதியில் 3 முதல் 4 அடி ஆழத்திற்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கிலான யூனிட் கிராவல் மண் திருடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் இரவில் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் லாரிகளில் திருடி சென்றனர். ரூ.பல லட்சம் மதிப்பிலான மண் திருடப்பட்டு உள்ளது. கனிம வளம், நீர்வளத்துறை மற்றும் போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் இரவு நேர மண் திருட்டு தொடர வாய்ப்புள்ளது.

சமூக ஆர்வலர் பாலமுருகன்: இப்பகுதியினர் இங்குள்ள மயானத்திற்கு வரும்போது ஆற்றின் நடுவே மண் அள்ளப்பட்டுள்ள பகுதியில் குளிப்பது வழக்கம். தற்போது மண் திருடப்பட்டுள்ளதால் ஆழமானது தெரியதவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளேன் என்றார்.

Advertisement