கவர்னர், அமைச்சர் டில்லியில் முகாம் புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு

புதுச்சேரி : கவர்னர் கைலாஷ்நாதனை தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயமும் டில்லியில் முகாமிட்டுள்ளதால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரிக்கு கடந்த 10ம் தேதி வருகை தந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மரியாதை நிமித்தமாக சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது முதல்வரிடம் 'ஹவ் ஆர் யூ' எனக் கேட்டார். உடன் முதல்வர், 'ஐ ஆம் நாட் வெல்' எனக் கூறியதை கேட்டு மத்திய அமைச்சர் அதிர்ச்சியடைந்து, ஏன் என்றார்.

அப்போது, முதல்வர் என்.ஆர்.காங்., ஆட்சியை துவங்கியதே மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான். அதிகாரம் இல்லாததால், பல விஷயங்களில் முடிவெடுக்க முடியவில்லை. தற்போதைய மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கும் என நம்புகிறோம், என்றார்.

அதிகாரிகளை கூட மாற்ற முடியவில்லை. ஒரு அதிகாரியை வேறு பிராந்தியத்திற்கு மாற்றினேன். ஆனால், அந்த அதிகாரி தற்போது முக்கிய இடத்தில் உள்ளார். இதனால், அரசுக்கு பல சிக்கல் எழுகிறது.

பின், முன் எப்பொழுதும் இல்லாத வகையில் அமைச்சரை, கார் வரை சென்று அவரை, வழியனுப்பி வைத்தார். காரில் அமர்ந்த அமைச்சரின் காதில், முதல்வர் ரகசியமாக பேசினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கவர்னர் கைலாஷ்நாதன் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து புதுச்சேரியின் உள்துறை அமைச்சரான நமச்சிவாயம் நேற்று காலை அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றது, புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராஜ்நிவாஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, கவர்னரின் பயணம் ஏற்கனவே திட்டமிட்டது. அவர் இன்று புதுச்சேரி திரும்புவார் என்றனர்.கல்வித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நமச்சிவாயும், சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியாகும் நாளில் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement