தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் பாராட்டு; குறைதீர் கூட்டத்தில் பெருமிதம்

மேலுார் : 'அனைத்து தரப்பு மக்களின் குறைகளை தினமலர் நாளிதழ் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது. இதில் செய்தி வெளியானதும் மறுப்பு தெரிவிக்க முடியாத அதிகாரிகள் அவற்றை உடனே நிறைவேற்றுகின்றனர் ' என்று மேலுார் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற விவசாயிகள் மேலும் பேசியதாவது: புதுசுக்காம்பட்டி பாண்டி சிறுமேளம் கண்மாயில் 22 ஏக்கரில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

பெரிய அருவி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தென்னை விவசாயத்தைக் காப்பதற்கு வெள்ளை ஈக்களை ஒட்டுண்ணி அல்லது மஞ்சள் அட்டை வழங்க வேண்டும்.

காவிரி திட்ட தண்ணீரை தனியார் உணவகத்தினர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். பெருமாள் குளத்தை துார்வாராமல் நிலமாக மாறி வருவதால் உடனே துார் வார வேண்டும்.

நாவினிபட்டி தெருவிளக்கு மின்ஒயரால் உயிர் பலி ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் என்றனர். இவை தவிர, மேலவளவில் கண்மாய் தண்ணீர் வீணாவது. கீரனுார் விவசாயிகளுக்கு பன்றிகள் தொல்லை, சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயில் மராமத்துப்பணி, இ. மலம்பட்டி சிறுவன கண்மாயில் துார்வாருதல், கள்ளம்பட்டி கண்மாயில் உடைந்த மடையை சரி செய்வது குறித்து எடுத்துக் கூறினர். விவசாயிகள் மணி, கிருஷ்ணன், சிதம்பரம், கதிரேசன்,, சாகுல் ஹமீது உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement