முதல் போக நெல் சாகுபடிக்காக மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடி பணிகளை துவக்க விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாற்றாங்கால் வளர்க்க உழவு பணிகள் கம்பத்தில் துவங்கி உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இச்சாகுபடி முழுக்க மழையை நம்பியே உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 115.30 அடியாக இருந்தது. அனைக்கு 517 கன அடி வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 100 கன அடி திறக்கப்பட்டது.

இந்தாண்டு தற்போது 114.50 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 3 கனஅடியாகவும், அணையிலிருந்து குடிநீருக்கு 100 கன அடியும் வெளியேற்றப்படுகிறது. அணை நீர் மட்டம் 112 அடி இருந்தாலே நாற்றாங்கால் வளர்க்க தண்ணீர் திறக்கலாம் என்று ஆயக்கட்டு விதிகள் உள்ளன. ஆனால் அதிகாரிகள் குடிநீர் அம்சத்தை சுட்டிக்காட்டி திறக்க மாட்டார்கள்.

தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளன.

எனவே கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கம்பம், ஆங்கூர் பாளையம் பகுதியில் நாற்றாங்கால் வளர்க்க உழவு பணிகளை துவக்கி உள்ளனர்.

Advertisement