குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

புதுச்சேரி : லாம்பார்ட் சரவணன் நகரில் புதுச்சேரி அரசு, குடிசை மாற்று வாரியம் மூலம் 896 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டதில், 464 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் தடைபட்டிருந்தன.

முதல்வர் ரங்கசாமி நேற்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை நேரில் அழைத்து மீதமுள்ள பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடித்து பயனாளிகளிடம் ஓப்படைக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

மேலும் அங்கு குடிநீர், சாலை, கழிவுநீர் வாய்க்கால், போன்ற அடிப்படை வசதிகளையும் விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிகாரிகள் நாளையே (இன்று) மீதமுள்ள பணிகளை தொடங்குவதாக தெரிவித்தனர்.

அதுபோல், காமராஜர் வீடுகட்டும் திட்டத்தை, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்துடன் இணைத்து ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தை துறை அமைச்சர் ​திருமுருகன் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முதல்வரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்றனர்.

அப்போது 'வீடு கட்டுவதற்கான மானியத்தொகை பயனாளிகளுக்கு விரைவில் சென்று சேரும் வகையில் விண்ணப்பங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

நேரு எம்.எல்.ஏ., குடிசைமாற்று வாரியம் மற்றும் பொலிவுறு நகரத் திட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement