கும்பக்கரை அருவி அருகே சுற்றுலா வேன் மீது மோதிய காட்டுமாடு; அதிர்ஷ்டவசமாக தப்பிய சுற்றுலா பயணிகள்

பெரியகுளம் : பண்ருட்டியிலிருந்து கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்ற வேன் மீது காட்டுமாடு மோதியதில் அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் தப்பினர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொக்குபாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் 54. இவரது குடும்பத்தைச் சேர்ந்த முருகன் 57. உதயகுமார் 33. சாந்தி 51. கார்த்திகா 29. காவியா 16. தஷ்சிகா 4 உட்பட 20 பேர் பள்ளி விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியிலிருந்து கேரளாவிற்கு 3 நாள் சுற்றுலாவிற்கு கிளம்பினர். வேனை டிரைவர் விநாயகம் 29. ஓட்டினார்.

நேற்று காலை 7:20 மணிக்கு கும்பக்கரை அருவிக்கு செல்லும் போது, அருவிக்கு 2 கி.மீ., முன்பு காட்டுமாடு மாந்தோப்பிலிருந்து ஓடி வந்து வேன் மீது மோதி, காயமின்றி தப்பியது.

இதில் நிலைதடுமாறிய வேன் டிரைவர் இடதுபுறம் இருந்த மரங்களில் மோதாமல், பள்ளத்தில் கவிழாமல் சாமர்த்தியமாக வேனை ரோட்டோரம் பிரேக் அடித்து நிறுத்தினார்.

தூங்கிக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் முன்புறம் சீட் கம்பியில் மோதினர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.வேன் முன்புறம் சேதமானது.

வனத்துறையினர் கவனத்திற்கு: பெரியகுளம் புரவு விவசாயிகள் இந்தாண்டு மா விவசாயம் விளைச்சல் இல்லாமல் பாதித்துள்ள நிலையில், சில மாந்தோப்பில் காட்டுமாடுகள் புகுந்து சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நீர் நிலைகளை தேடி விளைநிலங்களில் சுற்றி திரிகிறது.

வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து வனவிலங்குகளை வனப்பகுதியில் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement